search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்சி சேவை"

    மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவை இன்று தொடங்கியது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    முதலில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை சேவை தொடங்கப்பட்டது. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்கிறார்கள்.

    கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மேலும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேறு போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டி உள்ளது என்று பயணிகள் கூறினர்.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவையை தொடங்குவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது.

    இதற்காக சில மெட்ரோ ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி இன்று அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.

    இதேபோல் கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏ.ஜி-டி.எம்.எஸ். மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் டாக்சி சேவை இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலான இடங்களுக்கு இயக்கப்படும். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.10, டாக்சி சேவைக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு பயணிகள் நடந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது மெட்ரோ ரெயில் நிலைய வாசலிலேயே ஷேர் ஆட்டோ, டாக்சி சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் மிகுந்த வசதியாக இருப்பதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “வேலை முடிந்து மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டியதிருந்தது. தற்போது ஷேர் ஆட்டோ, டாக்சி சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் வீடு திரும்ப வசதியாக இருக்கிறது. இதனால் வீட்டுக்கு சீக்கிரம் சென்று விடமுடியும். கட்டணமும் குறைவாக இருக்கிறது” என்றனர். #MetroTrain
    ×